About Us


பசியின் சகியாமை !

பசி என்பது ஒரு உபகாரக்கருவி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட நல்வினையாகும்.
இந்த பஞ்ச பூத உலகில் ஜீவன்கள் மற்றும் ஜீவர்கள் பசியில்லாமல் வாழவே முடியாது...
பசிக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் கிடையாது
எனவேதான் எல்லா உயிர்களுக்கும் பசி என்பது ஒரு உபகாரக்கருவியாக இறைவன் தந்து உள்ளார்..
பசியினால் மட்டுமே ஒரு ஜீவனை ஒரு ஜீவனை தொடர்பு கொள்ள முடியும்.வேறு வழிகளில் தொடர்ர்பு கொள்ளவே முடியாது.
அதற்கு பெயர்தான் அன்பு தயவு கருணை அருள் என்பதாகும்

எனவேதான் ஜீவகாருண்யம் என்னும் கருவியை ஒவ்வொரு ஜீவர்களும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை வள்ளலார் வலியுறுத்துகின்றார்..
அதற்கு ஜீவகாருண்யம் என்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார் ஆன்மாவில் இருக்கும் *அருள்.அறியாமை.
அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால. மறைக்கப் பட்டுள்ளன.
அந்த மாயா திரைகளை நீக்க .அகற்ற.விலக்க ஜீவகாருண்யம் மட்டுமே நேர் வழியாகும்.
எனவே தான் ஜீவகாருண்ய மே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் பசியைப் போக்குவதற்கு உணவுதான் முக்கிய காரண காரியமாக உள்ளன.
பசியைப் போக்கும் போது கொடுப்பவர்களுக்கும்.அவற்றைப் பெற்று அனுபவிப்பவர் களுக்கும்.அன்பும் அறிவும் உடனாக நின்று விளங்குகின்றது..
இதற்குத்தான் உபகாரசக்தி என்று வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்..
உபகாரசக்தி என்பதுதான் பாவத்தை நீக்கி.
ஆன்மா புண்ணியும் பெறும் வழியாகும்.
அந்த புண்ணியத்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற வேண்டும் என்பது இறைவன் சட்டத்தின் நியதி யாகும்...

img

பசி என்பது ஏழை.பணக்காரன் அனைவருக்கும் பொதுவானது என்றாலும்.பொருள் உள்ளவர்கள் பசியை சிரமம் இல்லாமல் போக்கிக் கொள்வார்கள்..
ஏழைகள் பசியினால் படும் அவத்தைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என்பதை பொருள் உள்ளவர்கள் தெரிந்து கொண்டு ஏழைகளின் பசியைப் போக்க வேண்டும்.
பசியைப் போக்கும் ஒரே வழிதான் அருளைப் பெறும் துவாரமாகும்
பசியின் சகியாமையால் ஏழைகள் படும் அவத்தைகளை வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடைப் பகுதியில் பதிவு செய்துள்ளதை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பசியினால் துன்பம் நேரிட்டபோது
மன எழுச்சியால் அத்துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள்.
பசி நேரிட்டபோது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்கள் என்பது சொல்ல வேண்டுவதில்லை.
உலக முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்டபோது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் 'பசி நேரிட்டது, என்ன செய்வது!' என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான்.

பகைவரால் எறியப்பட்டு மார்பில் உருவிய பாணத்தையுங் கையாற் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரை யெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் பசி நேரிட்டபோது, சௌகரியத்தை யிழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து 'இளைப்பு வருமே' சண்டை எப்படிச் செய்வது!*' என்று முறையிடுகின்றார்கள்.
இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து முற்றும் துறந்து அறிவையறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும் இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தவசிகளும் பசி நேரிட்டபோது தங்கள் தங்கள் அனுபவலட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பசியைப் போக்கிக் கொள்ள வருகின்றார்கள்; உணவு நேராதபோது நிலை கலங்குகின்றார்கள்.
சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர் விடத்தக்க மானிகளும் பசி நேரிட்டபோது, சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங் குலைகின்றார்கள்.
சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள்.
கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை யறிந்து செய்தற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள்.
இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும் பசி நேரிட்டபோது, புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள்.
நாமே பெரியவர் நமக்குமேற் பெரியவரில்லை யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும் பசி நேரிட்டபோது, அகங்காரங் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள்.
ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்.
பொருள் உள்ளவர்கள் பசி நேரிட்ட போது இப்படி கலங்குகிறார்கள் என்றால் ஏழைகளின் நிலையை நினைத்து பார்க்க வேண்டும்
இவரிவர் இப்படி இப்படியானால் ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடு படார்கள்! அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங்கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமுண்டாகும்!
அந்தச் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்லுதற்கும் அருமை என்றறிய வேண்டும்.
ஆதலால் ஆன்ம லாபம் பெறுவதற்கு ஜீவகாருண்யமே நேர்மையான நேர்வழியாகும்..
எனவே உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ள நாம் ஒவ்வொருவரும் ஆன்மலாபம் பெற வேண்டும் என்பதே இறைவன் ஆணையாகும். இறைச் சட்டமாகும்.
ஆன்ம லாபம் பெற்றால் அன்பும் அறிவும் உண்மையைத் தேடும்..
உண்மை என்பது மெய்ப்பொருள் என்பதாகும்.
மெய்ப்பொருள் என்பது கடவுள் ஒருவரே என்பதாகும்..
அந்த ஒரே கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்..
அருளை வழங்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்தவர்களே மெய்ப்பொருளை அறிந்த *சுத்த சன்மார்க்கிகள் ஆவார்கள்..
அவர்களே மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவர்கள்...
வள்ளலார் பாடல் !
துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்

பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!
என்னும் பாடல் வாயிலாக பசியைப் போக்கி சாவையும் பிறப்பையும் தவிர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்..
பசியைப் போக்கினால் மட்டுமே ஆன்ம லாபம் கிடைக்கும்.
ஆன்ம லாபம் பூரணம் பெற்றால் தான் இறைவன் அருள் கிடைக்கும்.இறைவன் அருள் பூரணம் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...
இத்தகைய உயர்ந்த ஜீவகாருண்ய சேவையையே நமது ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையம் பத்துப் பொறுப்பாளர்களுடன் நல் உள்ளங்கள் ஆதரவோடும் அன்போடும் செவ்வனே செய்து வருகிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அருட்பெருஞ்ஜோதி
நித்திய அன்னதானத்திட்டம் சென்னை ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில்
அன்னதானம் செய்ய உறுப்பினராக அனைவருக்கும் வாய்ப்பு.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஆவடியில் வள்ளலார் பசியாற்றும் மையம் அமைத்து பசிதவிா்த்தல் எனும் ஜீவகாருண்ய பணி ஜாதி,மத பேதமின்றி *சாதுக்கள்,சிவனடியாா்கள், பக்தா்கள்,பொதுமக்கள்,ஏழை,எளியோா் அனைவரும் பசிப்பிணி நீங்கி செல்கிறாா்கள்.
இப்போ்பட்ட மேலான புண்ணியத்தில் தாங்களும்,தங்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சேவை செய்ய ஒரு வாய்ப்பு.
தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணநாள்,விஷேச நாட்கள்,பொியோா் & சிறியோா் பிறந்தநாள் விழா, பொியோா்களின் நினைவு நாட்களில் தங்கள் பெயரால் அன்னதானம் செய்யலாம்.
வருடத்தில் 1 நாள் நமது ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் தாங்கள் தருமம் செய்யும் நாளாக இருக்கட்டும் பசிதீா்ப்பது பரம புண்ணியம்.
உண்டி கொடுத்தோா் உயிர் கொடுத்தோரே.